மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவுக்கு வெளியே ஒரு வாக்குச்சாவடியில் பஞ்சாயத்து தேர்தலில் ஓட்டு போட மக்கள் வரிசையில் நிற்க, பாராமிலிட்டரி வீரர் ஒருவர் பாதுகாப்புக்கு நிற்கிறார். ஜூலை 8, 2023 (AFP/திப்யாங்ஷு சர்கார்)

2024 இந்தியத் தேர்தல்கள்: பத்திரிகையாளர் பாதுகாப்புக் கையேடு

2024இல் ஆளும் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க தேர்தலை எதிர்கொள்கிறது. வரும் ஏப்ரல் 2024இல் நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் 60 கோடிக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட இந்திய வாக்காளர் திரள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்த இருக்கிறது.

சிபிஜேவின் அவசரகால செயல்பாட்டுக் குழு இந்தியாவின் தேர்தல் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கையேட்டை உருவாக்கியிருக்கிறது. இதில் பதிப்பாசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்களுக்கான தகவல்கள் இருக்கின்றன. தேர்தலுக்கு தயாராவது எப்படி, டிஜிட்டல், உடல்ரீதியான, மனரீதியான ஆபத்துகளைக் குறைப்பது எப்படியென்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. பிரச்சினை எழக்கூடிய அரசியல் செய்திகளில் தணிக்கை முயற்சிகள், செய்தி சேகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. கடந்த தேர்தல் மற்றும் கடந்த ஐந்தாண்டுகளின் போக்குகளை வைத்து, ஆயுதமேந்திய பிரச்சினைப் பகுதிகள் & நிகழ்வுகள் தரவுத் திட்டம்(ஏசிஎல்ஈடி) நமக்குக் காட்டுவது பத்திரிகையாளர்கள் அதிக தாக்குதல்கள், கும்பல் வன்முறைகள், பிற வன்முறை எதிர்ப்புகளுக்கு இலக்காகிறார்கள் என்பதையே. அதேநேரம், டிஜிட்டல் வெளியில் வெறுப்புப் பிரச்சாரத் தாக்குதல்கள், சைபர் மிரட்டல்கள், டிஜிட்டல் கண்காணிப்புகள் போன்றவையும் அதிகரித்திருக்கின்றன. இவற்றால் செய்தியறைகளும் ஊடகத்தினர் முழுமையுமே மனநல அழுத்தங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஆதாரம்:  ஆயுதமேந்திய பிரச்சினைப் பகுதிகள் & நிகழ்வுகள் தரவுத் திட்டம்; www.acleddata.com

ஏசிஎல்ஈடியின் நிகழ்வுவாரியான தரவுத் தொகுப்பு, உலகெங்கும் நடந்த அரசியல் வன்முறைகள், போராட்டங்கள் குறித்த தகவல்களையும் சில குறிப்பிட்ட வன்முறையல்லா நிகழ்வுகளையும் பிரித்து தொகுத்தளிக்கிறது. ஏசிஎல்ஈடி தரவு, சம்பவங்கள் நிகழும்போதே சேகரிக்கப்பட்டு வாராவாரம் வெளியிடப்படுவது. ஏசிஎல்ஈடி தரவுகளில் நிகழ்வு வகை, தொடர்புடையவர்கள், இடம், தேதி மற்றும் நிகழ்வின் பிற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். ஏசிஎல்ஈடி பின்பற்றும் முறையியல் பற்றிய விளக்கமான விவரங்களுக்கு ஏசிஎல்ஈடி கோட் புக்கை பார்க்கவும்.

தரவு விவரப்படங்கள் குறித்த குணால் மஜும்தரின் விளக்கம்

ஆதாரம்:  ஆயுதமேந்திய பிரச்சினைப் பகுதிகள் & நிகழ்வுகள் தரவுத் திட்டம்; www.acleddata.com

2019 பொதுத் தேர்தலுக்கு முந்திய காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததை, அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அதிகரித்ததை ஏசிஎல்ஈடி தரவுகள் காட்டுகின்றன. அதேநேரத்தில் சிபிஜே ஆவணங்களும் பத்திரிகை செய்திகளும் கூட பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் மிரட்டல்களும் அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன.

உதாரணமாக, பிப்ரவரி 2019இல், கட்சிக்காரர்களுக்கு இடையிலான சண்டையை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் பாஜக ஆதரவளார்கள் என சொல்லிக்கொண்டவர்களால் சட்டீஸ்கரில் தாக்கப்பட்டார். ஏப்ரல் 2019இல் தமிழ்நாட்டில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பேரணியில் காலி நாற்காலிகளைப் படமெடுத்த புகைப்பட பத்திரிகையாளரை காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் தாக்கினர்.

மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிரானவை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்ததை மே  6, 2019இல் சிபிஜே பதிவுசெய்திருக்கிறது. ஆளும் அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் எதிர்கட்சியான பாஜக ஆதரவாளர்களுக்கும் கொல்கத்தாவில் நடந்த மோதல் பராக்பூரில் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்ச்சிகளை பதிவுசெய்த பத்திரிகையாளர்களின் வாகனங்களில் கல் வீசப்பட்டது உள்ளிட்ட பல வழிகளில் மிரட்டப்பட்டனர். கெடுவாய்ப்பாக, இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்கள் தனிச் சம்பவங்கள் அல்ல; அதே நாளில் மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் மோதல்களைப் பதிவுசெய்த பத்திரிகையாளர்களும் வன்முறைக்கு இலக்காகினர்.  

பத்திரிகையாளர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் வன்முறையில் பாதிக்கப்படுவதை இவை காட்டுகின்றன, இதனால் பாரபட்சமின்றி சுதந்திரமாக செய்தி சேகரிக்க முடியாமல் போகிறது.

அதற்குப் பின்னான ஆண்டுகளில் உத்தரபிரதேசம், கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட பிற இந்திய மாநிலங்களிலும் வன்முறைகள் அதிகரித்ததை ஏசிஎல்ஈடி தரவுகள் சுட்டுகின்றன. இந்த மாநிலங்களில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்திருப்பதை மே 2019இலிருந்து சிபிஜேவின் ஆவணப்படுத்தலும் காட்டுகின்றது. 2019இலிருந்து கொல்லப்பட்ட 11 பத்திரிகையாளர்களில் நான்கு பேர் உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டிசம்பர் 2020இல் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர், அங்கே சட்டத்துக்கு புறம்பான பசு வதைக் கூடங்கள் இருந்ததை பதிவுசெய்ததற்காக ஒரு கூட்டத்தினரால் தாக்கப்பட்டார். செப்டம்பர் 2021இல் மைசூருவில் வலதுசாரிப் போராட்டக்காரர்களின் பேச்சைப் பதிவுசெய்த பத்திரிகையாளர் அவர்களால் தாக்கப்பட்டார்.

பத்திரிகை கண்ணியத்தைப் பாதுகாக்க, தகவல்கள் சுதந்திரமாக வெளியாவதை உறுதிசெய்ய, இந்த அரசியல்மயமான சூழலில் அதிக கவனமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவை என்பதை இத்தகைய பத்திரிகை தொடர்பான தாக்குதல்களின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

பாதுகாப்புக் கையேடு உள்ளடக்கம்

விரோதமான சூழலில் செய்திகளை சேகரிக்க பணியாளர்களை அனுப்பும் பதிப்பாசிரியர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள்

தேர்தலுக்கு முன் பதிப்பாசிரியர்களும், செய்தி அறைகளும் முன்னறிவிப்பில்லாமல் பத்திரிகையாளர்களை  செய்தி சேகரிக்க அனுப்ப வேண்டிவரும். அப்போது பணியாளர்களுக்கு ஆபத்தைக் குறைக்கப் பின்பற்றக்கூடிய நடைமுறைகளும், கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகளும் இவை:

  • இந்த பணிக்குப் போதுமான அனுபவம் உங்கள் பணியாளருக்கு இருக்கிறதா?
  • இந்தப் பணியில் அவர்களை பாதிக்கக் கூடிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இருக்கின்றனவா என்று ஆலோசித்தீர்களா?
  • பணியில் ஈடுபடும் அனைவரின் அவசரகாலத் தொடர்புகள் பத்திரமாக சேமிக்கப் பட்டிருக்கின்றனவா?
  • உங்கள் குழுவினர் உங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதற்கான அத்தாட்சிகள், ஊடக அனுமதிச் சீட்டுகள் அல்லது கடிதம் என தேவையானவற்றை வைத்திருக்கிறார்களா?
  • இந்த செய்தி சேகரிப்பில் உங்கள் குழு எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து அளவைக் குறித்து யோசித்தீர்களா? அதை வெளியிடுவதன் முக்கியத்துவத்தோடு ஒப்பிட்டால் அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தேவை இருக்கிறதா?
  • ஏற்படக்கூடிய ஆபத்துகள், அவற்றிலிருந்து பணியாளர்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரிக்கவும் (தேவைப்பட்டால் தனியே வேறு காகிதத்தில் நிரப்பி சேர்க்கவும்):
  • செய்தி சேகரிப்புக்கு அனுப்பப்படும் பத்திரிகையாளர்களின் வேலையாலோ பிற காரணிகளாலோ அதிக ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி வருமா? (உதாரணம்: நிகழ்வுக்கு அருகாமையில் பணியாற்றும் புகைப்படப் பத்திரிகையாளர்கள், பெண் பத்திரிகையாளர்கள்) ஆம் என்றால், விவரிக்க:
  • கவச உடை, மூச்சுவிட உதவும் கருவி, மருத்துவ உபகரணங்கள் போன்ற சிறப்பு உதவிகள் தேவைப்படுமா? பத்திரிகையாளர்களிடம் தேவையான உபகரணங்கள் இருக்கிறதா? அவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்த தெரியுமா?
  • பத்திரிகையாளர்கள் தாங்களே வண்டி ஓட்டிச் செல்கிறார்களா? அப்படியென்றால், அவர்கள் வாகனங்கள் பயணிக்க ஏற்ற நிலையில், பணிக்குப் பொருத்தமாக இருக்கின்றனவா?
  • தேவைப்பட்டால், ஒரு இடத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என்று உங்கள் குழுவுக்கும், அவர்களோடு நீங்கள் எப்படி தொடர்பு கொள்வீர்கள் என்றும் தெரியுமா? ஆம் என்றால், விவரிக்கவும்:
  • காயம் பட்டால் அணுகவேண்டிய அருகாமை மருத்துவ வசதிகளை அடையாளம் கண்டிருக்கிறீர்களா? ஆம் என்றால், இங்கே பட்டியல் இடவும்:
  • உங்கள் குழு சரியானபடி காப்பீடு பெற்றிருக்கிறார்களா? பொருத்தமான மருத்துவக் காப்பீடு அளித்திருக்கிறீர்களா?
  • நீண்ட கால மன உளைச்சல்/மன அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறித்து யோசித்திருக்கிறீர்களா?

ஆபத்து அளவீடுகள் மற்றும் திட்டமிடல் குறித்து மேலும் விவரங்களுக்கு சிபிஜே ரிசோர்ஸ் செண்டரைப் பார்க்கவும்.

டிஜிட்டல் பாதுகாப்பு: அடிப்படைகள்

இணையத்திலும், மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பாக இருக்க டிஜிட்டல் பாதுகாப்பு அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது முக்கியம். தேர்தல் செய்திப் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களுக்கான சில பாதுகாப்பு நடைமுறைகள் இங்கே:

உங்கள் கணக்குகளை பாதுகாக்க
  • உங்கள் கணக்குகளில் எல்லாம் இரண்டு காரணி அங்கீகாரம் எனும் 2FAவை ஆன் செய்து வையுங்கள். எஸ்.எம்.எஸுக்கு பதில் ஆத்தி போன்ற செயலிகளைப் பயன்படுத்துங்கள்.
  • 2FA ஆன் செய்யப்பட்ட கணக்குகளிலும் பேக்கப் கோடுகளை வேறெங்காவது சேமித்து வையுங்கள். ஆத்தி போன்ற செயலிகளை இழந்தாலும் உங்கள் கணக்கை பயன்படுத்த இது உதவும்.
  • பாதுகாப்பான கடவுச்சொல்களை உருவாக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுங்கள். ஒவ்வொரு கணக்குக்கும் வித்தியாசமான கடவுச்சொல், குறைந்தது 15 எழுத்துகள் கொண்ட கடவுச்சொல், எந்த சொந்த விவரங்களும் இல்லாத கடவுச்சொல் போன்றவை இதில் அடங்கும்.
  • உங்கள் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் பிறர் பார்க்கக்கூடாது என்று நினைக்கும் விசயங்களை அவ்வப்போது சரிபார்த்து, பிரதி எடுத்து வைக்கவோ அழிக்கவோ செய்யுங்கள்.
  • உங்கள் கணக்குகளில் ”அக்கவுண்ட் ஆக்டிவிட்டி (கணக்கு செயல்பாடுகள்)” பிரிவை அடிக்கடி சோதனை செய்யுங்கள். உங்களுக்குத் தெரியாத சாதனங்களில் இருந்து லாக்-இன் ஆகியிருந்தால் அந்த குறிப்பிட்ட சாதனத்தை நீக்குங்கள்.
ஃபிஷிங் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு
  • பொதுவாகவே தேர்தல் காலத்தில் ஃபிஷிங் எனப்படும் கணிணித் தூண்டிலிடல் குற்றங்கள் அதிகரிக்கும். ஃபிஷிங் செய்திகள் உங்களை ஏமாற்றி ஒரு இணையதளத்தில் முக்கியமான தகவல்களை உள்ளிட வைக்கலாம், அல்லது அவற்றில் இருக்கும் இணைப்புகளையோ கோப்புகளையோ க்ளிக் செய்தால் அவற்றில் இருக்கும் நச்சுநிரல்கள் உங்கள் சாதனங்களை தாக்கும்.
  • எதையாவது உடனே செய்யச் சொல்லும், நம்பமுடியாத விசயங்களைத் தருவதாகச் சொல்லும் செய்திகளிடம் உஷாராக இருங்கள்.
  • அனுப்புபவரின் கணக்கு விவரங்கள், செய்தி உள்ளடக்கம் ஆகியவற்றை கவனமாக ஆராய்ந்து நம்பகத்தன்மையை உறுதிசெய்யுங்கள். ஸ்பெல்லிங், இலக்கணம், லேஅவுட், எழுதும் முறை போன்றவற்றில் இருக்கும் சிறிய மாற்றங்கள் அந்த கணக்கு போலியானது, அல்லது ஹாக் செய்யப்பட்டது என்பதை காட்டலாம்.
  • ஏதாவது எதிர்பாராத, சந்தேகத்துக்குரிய முறையில் இருக்கும்போது செய்தியை அனுப்பியவரிடம் தொலைபேசியில் அழைத்தோ வேறு வழிகளிலோ உறுதி செய்துகொள்ளுங்கள்.
  • உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து வந்தது போல இருந்தாலும் இணைய இணைப்புகளை திறக்கும் முன்பு நன்றாக யோசியுங்கள். இணைய இணைப்பின் மேல் கர்சரை வைத்தால் தெரியும் ப்ரிவியூக்களில் அது சரியான இணைப்புதானா என உறுதிசெய்ய முடிகிறதா பாருங்கள்.
  • மின்னஞ்சலில் வரும் கோப்புகளை திறக்காமல் ப்ரிவ்யூவில் பாருங்கள். அதை பதிவிறக்காதவரை தீங்கிழைக்கும் நச்சுநிரல்களால் பிரச்சினை இருக்காது. சந்தேகம் வந்தால் அனுப்பியவரை அழைத்து கோப்பின் உள்ளடக்கத்தை மின்னஞ்சலிலேயே காப்பி-பேஸ்ட் செய்து அனுப்புமாறு சொல்லுங்கள், அல்லது பதிவிறக்காமல் ப்ரிவ்யூவிலேயே அதன் உள்ளடக்கத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் விரிவான விவரங்களுக்கு சிபிஜேவின் டிஜிட்டல் பாதுகாப்புக் கையேட்டைப் படியுங்கள்.

நியூ டெல்லி. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்திய பாராளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டபிறகு அவரது இருப்பிடம் முன் போலீஸும் ஊடகத்தினரும் கூடியிருக்கின்றனர். ரியூட்டர்ஸ்/ அனுஷ்ரீ ஃபத்னாவிஸ்.

டிஜிட்டல் பாதுகாப்பு: மின்னணு சாதனங்கள் தயார்நிலை

தேர்தலில் செய்தி சேகரிக்கும்போது பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவும், சேகரித்த செய்திகளை அனுப்பவும் தொலைபேசிகளைப் பயன்படுத்தலாம். தங்கள் சகபணியாளர்கள், செய்தி அளிப்பவர்களிடம் தொடர்பில் இருக்கவும் தொலைபேசியைப் பயன்படுத்துவர். இவற்றால் பத்திரிகையாளர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டால் டிஜிட்டல் பாதுகாப்புப் பிரச்சினைகள் உண்டாகும், அவர்களது தொலைபேசிகள் பறிக்கவோ உடைக்கவோ படலாம். செய்தியறை ரெய்டுகளும் நடக்கலாம், அதில் கணிணி உள்ளிட்ட சாதனங்கள் பறிக்கப்படலாம்.

உங்களை பாதுகாத்துக் கொள்ள:

  • நீங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாலோ உங்கள் சாதனங்கள் பறிக்கப்பட்டு தேடப்பட்டாலோ, உங்கள் தொலைபேசி, கணிணியில் உள்ள தகவல்களால் உங்களுக்கோ பிறருக்கோ என்ன ஆபத்துகள் ஏற்படலாம் என்று அறிந்துவையுங்கள்.
  • செய்திசேகரிக்க செல்லும் முன் உங்கள் தொலைபேசியை ஹார்ட் டிரைவில் பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துச்செல்லும் சாதனத்தில் குடும்ப புகைப்படங்கள் போன்ற முக்கியமான, தனிப்பட்ட தகவல்களை நீக்குங்கள் அல்லது திறக்க முடியாதபடி வையுங்கள்.
  • செய்தி சேகரிக்கும்போது பயன்படுத்தாத கணக்குகள், செயலிகளில் இருந்து லாக் அவுட் செய்யுங்கள். அவற்றை தொலைபேசியிலிருந்து நீக்குங்கள். இணைய உலாவிகளிலும் லாக்-அவுட் செய்து ப்ரௌசிங் வரலாறை அழித்துவிடுங்கள். இதனால் உங்கள் தொலைபேசி பறிக்கப்பட்டு தேடப்பட்டால் உங்கள் கணக்குகள் அணுகப்படாமல் இருக்க உதவும்.
  • செய்திசேகரிக்கப் போகும் முன் எல்லா சாதனங்களிலும் கடவுச்சொல் வைத்து பூட்டுங்கள், ரிமோட் வைப் வசதியை ஆன் செய்யுங்கள். இணைய இணைப்பு இருந்தால்தான் ரிமோட்டாக அழிக்கமுடியும். கைரேகை, முகம் போன்றவற்றால் திறக்கும்படி வைத்துக்கொள்ளாதீர்கள். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டால் இவற்றை வைத்து உங்கள் சாதனத்தை எளிதாகத் திறக்கமுடியும்.
  • முடிந்தவரை குறைந்த சாதனங்களையே எடுத்துச் செல்லுங்கள். உபரி சாதனங்கள் இருந்தால் அவற்றை எடுத்துக் கொண்டு, சொந்த மற்றும் அலுவலக சாதனங்களை விட்டுச் செல்லுங்கள்.
  • உங்கள் ஆண்டிராய்ட் தொலைப்ஏசியில் என்கிரிப்ஷன் எனும் மறைகுறியீட்டாக்கத்தை ஆன் செய்து வைக்கலாமா பாருங்கள். புதிய ஐஃபோன்களில் இது தானாகவே ஆனில்தான் இருக்கும். என்கிரிப்ஷன் பற்றிய சட்டங்களைப் பாருங்கள்.
  • சகபணியாளர்களிடமும், செய்தி தருபவர்களிடமும் பேசுவதற்கு முடிந்தளவு சிக்னல் போன்ற பாதுகாக்கப்பட்ட செயலிகளையே பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்திகள் தானாக அழியும்படி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இணையதளங்கள் தடைசெய்யப்பட்டால் அவற்றைப் பார்க்க விபிஎன் பதிவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். விபிஎன் குறித்த சட்டங்களை ஆராயுங்கள், முந்தைய இணைய முடக்கங்களில் எந்த விபிஎன் சேவை நன்றாக செயல்பட்டது என்று பாருங்கள்.
  • இணையம் முழுமையாக முடக்கப்பட்டால் பிறரை எப்படி எப்போது தொடர்பு கொள்வது என்பதற்கு ஒரு திட்டம் வைத்துக் கொள்ளுங்கள்.
  • அலுவலகத்தில் ரெய்ட் நடந்தால், உங்கள் செய்தியறையின் கணிணிகளில் இருக்கும் தரவுகளை பாதுகாக்க என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிடுங்கள்.
  • உங்கள் செய்தியறையின் தரவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் வைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் ஒரு பிரதியாவது அலுவலத்துக்கு வெளியே, செய்தியறைக்கு தொடர்பில்லாத இடத்தில் இருப்பது நல்லது.
  • பேக்கப் செய்யும் தரவுகளை என்கிரிப்ட் செய்வது நல்லது. உங்கள் ஹார்ட் டிரைவையோ, யூஎஸ்பியையோ என்கிரிப்ட் செய்யலாம். சாதனங்களில் என்கிரிப்ஷன் ஆன் செய்யலாம். என்கிரிப்ஷன் குறித்த சட்ட நடைமுறைகளை தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

டிஜிட்டல் பாதுகாப்பு: உளவுச் செயலிகள், டிஜிட்டல் கண்காணிப்பு

சிபிஜே நேர்காணல்கள் மற்றும் சிட்டிசன் லேபின் ஆய்வுகள்படி பெகாசஸ் போன்ற திட்டமிடப்பட்ட உளவு முயற்சிகள் இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட செய்திகள் இருக்கின்றன. ஒருமுறை உங்கள் தொலைபேசியில் நிறுவிவிட்டால் இந்த திறன்வாய்ந்த உளவுச் செயலிகள் உங்களது பாதுகாக்கப்பட்ட செய்திகள் உட்பட எல்லா செயல்பாடுகளையும் கண்காணிக்கும். அரசாங்களுக்கு சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பெகாசஸை வேவுபார்க்கும் கருவியாக விற்பதாக இஸ்ரேலின் என்.எஸ்.ஓ குழுமம் சொல்கிறது. ஒப்பந்தங்களுக்கு மாறாக அதன் செயலிகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிப்பதாக சிபிஜேவிடம் பலமுறை சொல்லியிருக்கிறது.

உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள். 

  • ஐஓஎஸ் 16 அல்லது 17 உள்ள ஆப்பிள் தொலைபேசிகளில் உளவுச் செயலிகளிடம் இருந்து பாதுகாக்கும் லாக்டவுன் மோட் என்ற வசதி உண்டு. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் இதை ஆன் செய்துவைத்துக் கொள்ளலாம். இதை ஆன் செய்ய சாதனத்தை ரீஸ்டார்ட் செய்யவேண்டியிருக்கும்.
  • ஆண்டிராய்ட் சாதனங்களில் உளவுச்செயலி பாதுகாப்பு இருக்காது. அவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் சாதனங்களை அடிக்கடி முழுக்க அழிக்க(ஃபாக்டரி ரீசெட்) செய்ய வேண்டும். இதனால் உளவுச் செயலிகள் முழுக்க நீக்கப்படும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் ஜூலை 21இல் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் குறிப்பிட்டபடி சாதனங்கள் ரீபூட் செய்யப்படும்போது பெகாசஸ் நீக்கப்படுவதாக தெரிகிறது.

உங்கள் சாதனத்தில் உளவுச் செயலிகள் இருப்பதாக சந்தேகம் வந்தால்:

  • அந்த சாதனத்தை பயன்படுத்துவதை உடனே நிறுத்துங்கள், அணைத்து வையுங்கள். வேலை பார்க்குமிடம், படுக்கையறை என நீங்கள் நீண்ட நேரம் இருக்கும் இடங்கள் இல்லாமல் வேறெங்காவது அதை வையுங்கள். அதன் மைக் அல்லது கேமராவில் இருந்து உங்கள் நடவடிக்கைகள் முடிந்தளவு தூரமாக இருப்பதுபோல பார்த்துக் கொள்ளுங்கள்.
  • எல்லா கணக்குகளில் இருந்தும் லாக்-அவுட் செய்து, அவற்றை அந்த சாதனத்தில் இருந்து நீக்கிவிடுங்கள்.
  • வேறொரு சாதனத்தில் இருந்து உங்கள் எல்லா கணக்குகளின் கடவுச்சொற்களையும் மாற்றிவிடுங்கள்.

பெகாசஸ் உளவுச் செயலி பற்றி மேலும் அறிய எங்கள் பாதுகாப்பு வழிகாட்டியைப் படியுங்கள்.

டிஜிட்டல் பாதுகாப்பு: இணைய முடக்கம்

தேர்தல் காலத்தில் முழுமையான மற்றும் பகுதி இணைய முடக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவை பத்திரிகையாளர்களின் பணியில் நிறைய இடையூறுகள் விளைவிக்கும். இணையத்தை முடக்குவது அல்லது கட்டுப்படுத்துவதால், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு செய்தி தருபவர்களை தொடர்புகொள்ளவோ, தரவுகளை சரிபார்க்கவோ, செய்திகளை பதிப்பிக்கவோ முடியாமல் போகும். இந்தியாவில் இணைய முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகள், அவை ஊடகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை சிபிஜே ஆவணப்படுத்தியுள்ளது.

பின்வரும் நடவடிக்கைகளால், இணைய முடக்கத்தின்போது பாதிப்புகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்:

  • முழு முடக்கத்தில் என்ன செய்வதென செய்தியறையுடன், சகபணியாளர்களுடன் பேசித் திட்டமிடுங்கள். எங்கு நேரில் சந்திப்பது, இணையம் இல்லாமல் எப்படி தகவல் சேமிப்பது, பதிப்பாசிரியர்களுக்கு அனுப்புவது என விரிவாக திட்டமிடுங்கள். லேண்ட்லைன் எண்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள், ஆனால் அவை முக்கியமான தகவல்களைப் பேச பாதுகாப்பானவை அல்ல என்பதை மனதில் வையுங்கள். முழு முடக்கத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழும், பணியாற்றும் சகபணியாளர்களுக்கு எப்படி உதவலாம் என்று திட்டமிடுங்கள்.
  • இணையதளங்களில் இருந்து உங்களுக்குத் தேவையான ஆவணங்களையும் செய்திகளையும் இணைய முடக்கத்துக்கு முன்னே பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • இணைய முடக்கத்தில் போது தரவுகளை சேமிக்க பணியாளர்களுக்கு யூஎஸ்பி டிரைவ் அல்லது சிடிக்களை(CD) கொடுங்கள்.
  • சில இணைய வசதிகள் மட்டும் முடக்கப்படும்போது, தடுக்கப்பட்ட தளங்களை அணுக உதவும் விபிஎன் சேவைகளை தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். இணைய சேவை வழங்குவோர் அடிக்கடி விபிஎன்களை தடைசெய்துவிடுவார்கள், எனவே ஒன்றுக்கு மேற்பட்ட விபிஎன்களை வைத்துக்கொள்ளுங்கள். இணையம் முழுமையாக முடக்கப்பட்டால் விபிஎன் உதவாது.
  • பிறரைத் தொடர்புகொள்ள ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளை வைத்துக் கொள்ளுங்கள். பலவிதமான செயலிகளைப் பயன்படுத்தினால், ஒன்று தடைசெய்யப்பட்டாலும் வேறொன்றில் பேசிக் கொள்ளலாம். ஒவ்வொரு செயலியிலும் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக சில செயலிகளில் என்கிரிப்ஷன் தானாக ஆனில் இருக்காது, நீங்கள்தான் செய்யவேண்டும். இணைய முடக்க காலங்களில் பாதுகாப்பில்லாத எஸ்.எம்.எஸ் போன்ற வழிகளில் தொடர்பு கொள்வது கட்டாயமாகலாம், முக்கியமான தரவுகளை எப்படிப் பகிர்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
  • புளூடூத், வைஃபை டைரக்ட், என்.எஃப்.சி போன்றவை வழியாக தரவுகள் அனுப்பக் கற்றுக்கொள்ளுங்கள். அருகிலிருக்கும் சாதனங்களுக்கு இணையம் இல்லாமல் தரவு அனுப்ப இவை உதவும். இவை உங்கள் தொலைபேசியில் அமைப்புகள் பகுதியில் இருக்கும். இணைய முடக்கம் இல்லாதபோதே இவற்றை முயற்சி செய்து பாருங்கள், இவற்றின் வழி கோப்புகளை அனுப்பும்போது ஏற்படும் குறைபாடுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
  • உடனடியாக செய்தி வெளியிட முடியாவிட்டாலும் நடப்பதை பதிவுசெய்ய முடியலாம். முடிந்தால் என்கிரிப்ட் செய்யப்பட்ட சிடிக்கள், யூஎஸ்பிக்களைப் பயன்படுத்தி தரவுகளை சேமித்து சகபணியாளர்களிடம், பதிப்பாசிரியர்களிடம் கொடுங்கள். என்கிரிப்ஷன் இல்லாவிட்டால், ஒருவேளை நீங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டால் அதிகாரிகள் அந்த தரவுகளை பார்க்கமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இணைய முடக்கங்கள் பற்றிய விரிவான தகவல்களுக்கு சிபிஜேவின் கையேட்டைப் படியுங்கள்.

ஆகஸ்ட் 6, 2023. பந்திபோராவில் இந்திய ராணுவ வீரர் வசீம் அகமதின் இறுதிச்சடங்கின் போது கிராமத்தினர் ஒருவர் இந்திய ராணுவ வீரர்களுடன் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். தௌசீஃப் முஸ்தஃபா / AFP

டிஜிட்டல் பாதுகாப்பு: இணையத் தாக்குதல்கள், திட்டமிடப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்கள்

திட்டமிடப்பட்ட இணைய வெறுப்புப் பிரச்சாரங்கள் உள்ளிட்ட இணையத் தாக்குதல்கள் தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும். பத்திரிகையாளர்களின், அவர்களது செய்திகளின் மதிப்பைக் குறைக்கவிரும்பும் நபர்களின் தாக்குதல்களுக்கு ஊடகப் பணியாளர்கள் இலக்காவார்கள். இவற்றில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரங்கள், போலிச் செய்தி பரப்புதல் போன்றவற்றால் பத்திரிகையாளர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தமுடியாமல் போகும், இணையத்தையே திறக்கமுடியாதபடி ஆகும். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் ரீதியான, ஆணாதிக்க கொடுமைகளுக்கு இலக்காகிறார்கள். இந்தியாவின் பெண் பத்திரிகையாளர்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாவதை சிபிஜே பலமுறை பதிவுசெய்திருக்கிறது. இணையத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எளிதல்ல. ஆனால் பத்திரிகையாளர்கள் தங்களையும் தங்கள் கணக்குகளையும் பாதுகாக்க சிலவற்றைச் செய்யலாம்.

உங்களை பாதுகாத்துக் கொள்ள:
  • நீங்கள் வெளியிடும் செய்திகள் இணையவெளியில் தாக்குதலுக்கு உள்ளாகுமா என்று ஆய்வு செய்யுங்கள்.
  • இணைய தாக்குதல் செய்பவர்கள் உங்கள் கணக்குகளைத் திருட முயற்சி செய்யலாம். இந்த கையேட்டின் தொடக்கத்தில் கொடுத்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் கணக்குகளை பாதுகாப்பாக வையுங்கள்.
  • இணையத்தில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை வைத்து உங்களை மிரட்டவும், அச்சுறுத்தவும், தாக்கவும் செய்வார்கள். உங்கள் தனிப்பட்ட தரவுகள், வீட்டு முகவரி போன்றவற்றை உங்களைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் பொதுவெளியில் வெளியிடுவார்கள். உங்கள் பெயரைத் தேடிப் பாருங்கள். பொதுவெளியில் உங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்களை நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுங்கள்.
  • உங்கள் கணக்குகளில் தனியுரிமை அமைப்புகளை சரிபாருங்கள், முடிந்தளவு தொலைபேசி எண், பிறந்தநாள் போன்ற தனிப்பட்ட விவரங்களை நீக்குங்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்களை சமூக ஊடகங்களில் யாரால் பார்க்கமுடியும் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.
  • உங்களை அவதூறு செய்ய எந்த வகையிலாவது மாற்றிப் பயன்படுத்தப்படக்கூடிய புகைப்படங்களை மறையுங்கள், அல்லது நீக்குங்கள். இது இணையத் தாக்குதல்களில் அடிக்கடி செய்யப்படும் ஒன்று.
  • முடிந்தால் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இவற்றைப் பற்றி பேசுங்கள். இணைய வெறுப்பில் ஈடுபடுவோர் உங்களது நண்பர் வட்டம், உறவினர்களின் சமூக ஊடகங்கள் வழியாகவே தகவல்களைப் பெறுவார்கள். நீங்கள் இருக்கும் புகைப்படங்களை நீக்கவோ, அவர்கள் கணக்குகளை கட்டுப்படுத்தவோ சொல்லுங்கள்.
  • உங்கள் விவரங்கள் பொதுவெளியில் வெளியானால் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று யோசியுங்கள். இந்தப் பிரச்சினை தீவிரமானால் என்னென்ன செய்யவேண்டும் என்று உங்கள் நிறுவனத்துடன் பேசி திட்டமிடுங்கள்.
தாக்குதல்களின் போது:
  • இணையத்தில் திட்டுபவர்களிடம் உரையாட முயலாதீர்கள், இது சூழலை இன்னும் மோசமாக்கும்.
  • முடிந்தால் தெரியாதவர்கள் பார்க்க முடியாதபடி உங்கள் கணக்குகளை மறைத்து, இவை குறையும்வரை ஆஃப்லைனில் இருங்கள்.
  • உங்கள் கணக்குகளில் 2FA பாதுகாப்பு ஆனில் இருக்கிறதா, எல்லா கணக்குக்கும் தனித்தனி நீளமான கடவுச்சொற்கள் இருக்கிறதா பாருங்கள்.
  • மோசமான பின்னூட்டங்கள், படங்களை ஆவணப்படுத்துங்கள். ஸ்க்ரீன்ஷாட்டுகள், நேரம், அவர்களின் சமூக ஊடக கணக்குகள் போன்றவற்றை பதிவுசெய்யுங்கள். பின்னால் உங்கள் நிறுவனம், பதிப்பாசிரியர், கருத்துச் சுதந்திரத்துக்காக செயல்படும் நிறுவனங்கள், சமயத்தில் அரசு அதிகாரிகளிடமும் காட்ட இத்தகைய தகவல்கள் பயன்படும்.
  • உங்கள் குடும்பத்தினர், சகபணியாளர்கள், நண்பர்களிடம் நீங்கள் இணைய வெறுப்புத் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதை சொல்லுங்கள். இத்தகையவர்கள் அடிக்கடி குடும்பத்தினரையோ, பணியிடங்களையோ தொடர்புகொண்டு உங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சியில் ஏதாவது செய்திகள், படங்களை அனுப்புவார்கள்.
  • இத்தகைய வெறுப்புத் தாக்குதல்கள் உங்களை தனிமையாக உணரச் செய்யும். உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வட்டத்தை உறுதிசெய்துகொள்ளுங்கள். இதில் நீங்கள் வேலை செய்யுமிடமும் இடம்பெற்றிருந்தால் நல்லது.

இணைய வெறுப்புத் தாக்குதல்களில் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது பற்றி மேலும் விவரங்களுக்கு சிபிஜேவின்  இந்தப் பக்கத்தை பாருங்கள்.

உடல் பாதுகாப்பு: பேரணிகள், போராட்டங்களில் பாதுகாப்பாக செய்தி சேகரிப்பது

தேர்தல் காலத்தில் பேரணிகள், பிரச்சார நிகழ்வுகள், நேரலை ஒலிபரப்புகள், போராட்டங்கள் என பல இடங்களில் கூட்டத்தின் மத்தியில் பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டியிருக்கும்.

ஆபத்தைக் குறைக்க:

அரசியல் நிகழ்வுகள், பேரணிகள்
  • உங்களிடம் சரியான அடையாள அட்டைகள், செய்தியாளருக்கான அடையாளங்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். சுதந்திரமாகச் செயல்படும் (ஃப்ரீலான்ஸ்) செய்தியாளர்கள் உங்களுக்கு பணி தரும் பதிப்பாசிரியரிடம் இருந்து ஒரு கடிதம் பெற்று வைத்திருப்பது பயன்தரும். பாதுகாப்பான சூழலில் அதை வெளியே தெரியும்படி வைத்துக் கொள்ளுங்கள். பிடித்து இழுக்கக்கூடிய கயிறுகளில் மாட்டாமல் பெல்ட் அல்லது உடையுடன் க்ளிப் செய்துகொள்ளுங்கள்.
  • கூட்டத்தின் மனநிலையை கணிக்க முயற்சி செய்யுங்கள். முடிந்தால், ஏற்கனவே அங்கிருக்கும் பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசி தெரிந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால், இன்னொரு பத்திரிகையாளர் அல்லது புகைப்படக்காரரை உடன் கூட்டிச்செல்லுங்கள்.
  • தேவைப்பட்டால், ஊடக நிறுவன அடையாளங்கள் இல்லாத ஆடைகள் அணியுங்கள். வண்டிகள், உபகரணங்களில் இருக்கும் ஊடக பெயர்கள்/லோகோக்களை எடுத்துவிடுங்கள். சூழ்நிலைக்கு பொருத்தமான காலணிகள் அணியுங்கள்.
  • சூழ்நிலை மோசமானால் தப்பிக்க திட்டம் வைத்திருங்கள். அங்கு செல்லும் முன்னும் சென்ற உடனேயும் இதனைத் திட்டமிடுங்கள். உங்கள் வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வையுங்கள், அல்லது போக்குவரத்தை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
  • சூழ்நிலை விரோதமாக மாறுவது தெரிந்தால், நிகழ்வு இடத்தில் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். ஆட்களை கேள்வி கேட்கத் தொடங்காதீர்கள்.
  • களத்தில் சென்று செய்தி சேகரிப்பதுதான் நோக்கம் என்றால், சேர்ந்து பணியாற்றுவது நல்லது. சட்டென வெளியெறும் வழிகள் கொண்ட இடத்திலிருந்து பணியாற்றுங்கள். அங்கிருக்கும் வழிகள், உங்கள் வாகனத்துக்கு செல்லும் வழிகளை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தாக்குதல் நடக்கும் வாய்ப்பு இருக்கும் போது, பாதுகாப்பு தேவையா என்று பாருங்கள். அத்தியாவசியம் தவிர்த்து களத்தில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
  • நிகழ்வுக்கு உள்ளே ஊடகங்களுக்கு என அளிக்கப்பட்ட இடத்திலிருந்தே வேலை செய்யுங்கள். பாதுகாப்பானது என்று உறுதியானால் மட்டுமே பிற இடங்களுக்கு செல்லுங்கள். ஆபத்து சூழலில் பாதுகாவலர்களோ போலீஸோ உதவுவார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளியே செல்லும் வழிகளை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • கூட்டம்/பேச்சாளர்கள் ஊடகங்களை விரோதமாக அணுகினால், மோசமான பேச்சுகளைக் கேட்க தயாராக இருங்கள். அத்தகைய சூழலில் உங்களது செய்தி சேகரிக்கும் வேலையை மட்டும் செய்யுங்கள். மோசமான பேச்சுகளுக்கு பதில் கொடுக்காதீர்கள். கூட்டத்திடம் உரையாடாதீர்கள். மற்றவர்கள் அப்படி நடந்துகொள்ளாவிட்டாலும் நீங்கள் உங்கள் பணிக்கு பொருத்தமாக (ப்ரொஃபஷனலாக) செயல்படலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
  • கூட்டத்தினர் எதையாவது எறியும், துப்பும் வாய்ப்பு இருக்கும் சூழலில் செய்திசேகரிப்பதில் உறுதியாக இருந்தால் நீர்புகாத, அடையாளங்கள் இல்லாத தொப்பி ஒன்றை அணிந்துகொள்ளுங்கள்.
  • வேலை கடினமாக இருந்தால் உங்கள் உணர்வுகளை அடக்கி வைக்காதீர்கள். உங்கள் சகபணியாளர்கள், மேலதிகாரிகளிடம் சொல்லுங்கள். அவர்களும் தயாராக இருப்பதும், ஒவ்வொருவரும் பிறரிடம் இருந்து கற்றுக்கொள்வதும் முக்கியம்.
போராட்டங்கள்

போராட்டங்களில் செய்தி சேகரிக்கும்போது ஆபத்தைக் குறைக்க:

  • தொலைபேசியை முழுமையாக சார்ஜ் போட்டுக்கொள்ளுங்கள். பணியை நன்றாகத் திட்டமிடுங்கள். போகும் பகுதியைத் தெரிந்துகொள்ளுங்கள். அவசரகாலத்தில் என்ன செய்வதென முன்கூட்டியே முடிவுசெய்யுங்கள். பயன்படுத்தத் தெரியும் என்றால் முதலுதவிப் பெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • குறிப்பாக பேரணிகள் போன்ற கூட்டநெரிசல் மிக்க நிகழ்வுகளில் செய்தி சேகரிக்கும்போது, சகபணியாளர்களுடன் சேர்ந்து வேலை செய்யுங்கள், செய்தியறையோடு அடிக்கடி தொடர்பிலிருக்க திட்டமிடுங்கள்.
  • வேகமாக நகர வசதியான ஆடைகள், காலணிகள் அணியுங்கள். எளிதாக பிடித்து இழுக்கக்கூடிய ஆடைகள், அடையாள அட்டைக் கயிறுகள் போன்றவற்றையும், நைலான் போன்று எளிதாக தீப்பிடிக்கக்கூடிய துணிகளையும் தவிருங்கள்.
  • எங்கிருக்கிறோம் என்று கவனத்தில் வையுங்கள். முடிந்தால் பாதுகாப்பான உயரமான பகுதியில் இருங்கள்.
  • எல்லா இடங்களிலும் வெளியேறும் வழியையும், சேர்ந்து வேலை செய்யும் இடங்களில் அவசரத்தில் எங்கு சந்திப்பது என்பதையும் திட்டமிடுங்கள். அருகாமையில் மருத்துவ உதவி கிடைக்கும் இடத்தை தெரிந்து வையுங்கள்.
  • எல்லா நேரமும் சுற்றி என்ன நடக்கிறதென விழிப்பாக இருங்கள். முடிந்தவரை மதிப்புமிக்க பொருட்களை குறைவாகவே வைத்திருங்கள். உபகரணங்களை வண்டிகளில் விடாதீர்கள், பூட்டிய வண்டிகளும் உடைத்து திருடப்படலாம். இருள் நேரம் இத்தகைய ஆபத்துகள் அதிகரிக்கும்.
  • கூட்டத்தின் நடுவே வேலை செய்யும்போது தெளிவாக திட்டம் வைத்துக் கொள்ளுங்கள். தப்பிக்க வழியில்லாமல் கூட்டத்துக்கு நடுவே மாட்டிக் கொள்வதை விட, கூட்டத்தின் வெளியிலிருந்து வேலை செய்வது நல்லது. தப்பிக்கும் வழியும், குழுவாக வேலை செய்யும்போது அவசரத்தில் சந்திக்கும் இடத்தையும் பேசி வைத்துக் கொள்ளுங்கள்.
  • பொதுவாக புகைப்பட பத்திரிகையாளர்கள் நிகழ்வுகளின் மையத்தில் அதிக ஆபத்தான சூழலில் இருக்க வேண்டி வரும். எனவே புகைப்படக்காரர்களைப்  பின்னாலிருந்து இன்னொருவர் கவனித்துக் கொள்ள வேண்டும், சில நொடிகளுக்கு ஒருமுறை கேமராவை விட்டு சுற்றிலும் பார்க்க நினைவில் வைக்கவேண்டும். கேமரா பட்டையை கழுத்தில் மாட்டுவதைத் தவிர்க்க வேண்டும், அது இழுக்கப்பட்டால் உங்கள் கழுத்து நசுங்குவதைத் தவிர்க்கலாம். புகைப்படக்காரர்களுக்கு தூரத்திலிருந்து பணியாற்றும் சலுகைகள் இல்லை. எனவே கூட்டத்தில் முடிந்தளவு குறைவாக நேரம் செலவழிக்க வேண்டும். தேவையான புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்.
  • விரோத மனப்பான்மை சட்டென எழும்பக்கூடிய கூட்டத்தில் எல்லா பத்திரிகையாளர்களுமே முடிந்தளவு குறைந்த நேரத்தில் வெளியேறுவதில் கவனமாக இருக்கவேண்டும்.
  • காஷ்மீரில் இந்திய போலீஸ் நெருப்பு, ரப்பர் குண்டுகள், பெல்லெட் குண்டுகள் ஆகியவற்றை போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தி இருக்கிறார்கள். பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டுமா என்று யோசியுங்கள். தேவை இல்லை என்றாலும் போலீஸை கவனியுங்கள். துப்பாக்கிகள் தென்பட்டால், பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள். கலவரங்களில் இயல்பாக கூட்டம் வெளியேறும் வழிகளில் சுற்றிவராதீர்கள்.

கண்ணீர் புகையை எதிர்கொள்ளும்போது ஆபத்தைக் குறைக்க

  • கேஸ் முகமூடி, கண் பாதுகாப்பு, உடல் கவசம், ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொள்ளுங்கள்.
  • ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகள் இருப்போர் கண்ணீர் புகை பயன்படுத்தப்படும் இடங்களைத் தவிர்க்கவேண்டும். காண்டாக்ட் லென்ஸ் அணிவதும் நல்லதல்ல. அதிகளவு கண்ணீர் புகை பயன்படுத்தப்படும் இடத்தில், காற்று அசையாமல் புகை அடர்ந்து இருக்கும் வாய்ப்பு உள்ளது.
  • பார்ப்பதற்கு கடினமாக இருக்கும் சூழலில் நகர உதவியாக உயரமான கம்பங்கள், கட்டிடங்கள் போன்ற அடையாளங்களை குறித்துக் கொள்ளுங்கள்.
  • கண்ணீர் புகை தாக்குதலுக்கு ஆளானால் புகையிடமிருந்து தப்பித்து நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவான உயரமான இடத்துக்கு செல்லுங்கள். முகத்தையோ கண்ணையோ தேய்க்காதீர்கள், அதனால் பாதிப்பு அதிகரிக்கவே செய்யும். முடிந்தவுடன் குளிர்ந்த நீரை ஊற்றி உடலில் படிந்திருக்கும் வாயுவை அகற்றுங்கள், குளிக்காதீர்கள். துணிகளில் படியும் க்ரிஸ்டல்கள் எளிதில் நீங்காது. அவற்றை பலமுறை துவைக்க வேண்டும் அல்லது திரும்பப் பயன்படுத்தாமல் விடலாம்.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தாக்குதல் நடைபெறும் சூழலில் பின்வருவனவற்றை யோசியுங்கள்:

  • போராட்டக்காரர்கள் ஊடகங்களை எப்படி அணுகுவார்கள் என்று கணித்துக் கொள்ளுங்கள், தாக்குதல் நடத்தக் கூடியவர்களை அடையாளம் கண்டு வைத்துக்கொள்ளுங்கள்.
  • உடல் மொழியை வைத்து தாக்க வருபவர்களை அடையாளம் காணுங்கள், உங்கள் உடல்மொழியை வைத்து சூழ்நிலையை அமைதிப்படுத்த முயலுங்கள்.
  • தாக்க வருபவர் கண்களைப் பார்த்து பேசுங்கள், கைகளை மூடாதீர்கள், பொறுமையாக பேசுங்கள்.
  • ஆபத்திலிருந்து கை நீட்டிப் பிடிக்கமுடியாத தொலைவிலேயே இருங்கள். பிடிக்கப்பட்டால் திருப்பித் தாக்காமல் பின்னகரவும், விடுபடவும் முயற்சி செய்யுங்கள். ஆபத்தான சூழலில் சுற்றிவளைக்கப்பட்டால் கத்துங்கள்.
  • தாக்குதல் அதிகமானால், ஒரு கையால் தலையைப் பாதுகாத்தபடி மெதுவாக விழுந்துவிடாமல் நகருங்கள். குழுவாக இருந்தால் கைகளைக் கோர்த்து ஒன்றாகவே நகருங்கள்.
  • தாக்குதலை ஆவணப்படுத்துவது பலநேரங்களில் முக்கியமான பத்திரிகைப் பணிதான், ஆனால் சூழலையும் உங்கள் பாதுகாப்பையும் கவனத்தில் வையுங்கள். தாக்க வருபவர்களை புகைப்படம் எடுப்பது ஆபத்தை அதிகரிக்கலாம்.
  • மிரட்டப்பட்டால், அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடுங்கள். உபகரணங்கள் உங்கள் உயிரை விட மதிப்பு வாய்ந்தவை அல்ல.

உடல் பாதுகாப்பு: விரோதப் போக்குள்ள சூழல்களில் பாதுகாப்பாக செய்திசேகரிப்பது

ஊடகங்கள் அல்லது வெளியாட்களிடம் விரோதமாக நடந்துகொள்ளும் இடங்களிலும் சமூகங்களிலும் பத்திரிகையாளர்கள் பலநேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். ஊடகங்கள் தங்களை நியாயமாக காட்டவில்லை, எதிர்மறையாக காட்டுகிறார்கள் என்ற கருத்துகள் இருக்கும் இடங்களில் இப்படி நடக்கலாம். ஊடகங்களிடம் விரோதப் போக்குடைய சமூகங்களில் தேர்தல் நேரங்களில் பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி வரலாம்.

ஆபத்தைக் குறைக்க:

  • முடிந்தவரை அந்த சமூகம், அவர்களது பார்வை பற்றி ஆராயுங்கள். ஊடகத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள், தேவைப்பட்டால் பெரிதாக கவனம் ஈர்க்காதபடி நடந்துகொள்ளுங்கள்.
  • தேவைப்பட்டால், ஊடக நிறுவன அடையாளங்கள் இல்லாத ஆடைகள் அணியுங்கள். வாகனங்கள், உபகரணங்களில் இருக்கும் ஊடக பெயர்கள், அடையாளங்களை எடுத்துவிடுங்கள். சூழ்நிலைக்கு பொருத்தமான ஆடைகள், காலணிகள் அணியுங்கள்.
  • பயன்படுத்த தெரியுமென்றால் ஒரு முதலுதவிப் பெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
  • அங்கு போக அனுமதி பெறுங்கள். அழைக்கப்படாமல், உங்களுக்கு ஆதரவளிக்க ஆளில்லாமல் போவது பிரச்சினைகளை உண்டாக்கலாம். உள்ளூர் ஆட்கள் யாராவது, மதிப்புக்குரியவர்கள் அல்லது தலைவர்கள் உங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உதவிசெய்தால் நல்லது. ஆபத்துக் காலங்கள் உதவக்கூடிய உள்ளூர் அதிகாரத் தரகர்களை அடையாளம் கண்டுவையுங்கள்.
  • எல்லா நேரத்திலும் தனிநபர்களின் பிரச்சினைகளையும் நம்பிக்கைகளையும் மரியாதையாக அணுகுங்கள்.
  • இரவில் வேலை செய்வதை தவிருங்கள்: அது ஆபத்தை மிக அதிகமாக்கும்.
  • அச்சமூகத்தில் பெருமளவு குடி, போதைப் பிரச்சினைகள் இருந்தால், எதிர்பாராத விசயங்கள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • மதிப்பு மிக்க பொருட்கள், பணம் முடிந்தவரை குறைவாகவே வைத்திருங்கள். உங்கள் உபகரணங்கள் திருடர்களை ஈர்க்குமா? மிரட்டப்பட்டால், அவர்கள் கேட்பதை கொடுத்துவிடுங்கள். உங்கள் உயிரை விட உபகரணங்கள் முக்கியம் இல்லை.
  • குழுவாகவோ உதவிசெய்ய ஆட்களுடனோ வேலை செய்வது நல்லது. ஆபத்து அளவைப் பொறுத்து உதவிசெய்வோர் அருகாமையிலிருக்கும் பாதுகாப்பான இடத்தில் (வணிக வளாகங்கள்/பெட்ரோல் பங்குகள்) காத்திருந்து, தேவைப்பட்டால் மட்டும் பங்கேற்கலாம்.
  • சந்திப்புகளைத் திட்டமிடுங்கள். அப்பகுதியின் நிலப்பரப்பை தெரிந்துகொண்டு உங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
  • உங்கள் வாகனத்தை சட்டென்று எடுக்கத் தயாராக வைத்திருங்கள். ஒரு ஓட்டுநர் இருப்பது இன்னும் நல்லது.
  • உங்கள் போக்குவரத்தில் இருந்து தொலைவில் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்கு திரும்பும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். அடையாளங்களைப் பார்த்துவைத்து, அதை சகபணியாளர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
  • மருத்துவ அவசரங்களில் எங்கே போவது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். வெளியேறும் வழியை யோசித்து வையுங்கள்.
  • ஆபத்து அதிகமாக இருந்தால் பாதுகாப்பு தேவையா என யோசியுங்கள். நீங்கள் வேலையில் கவனமாக இருக்கும்போது உங்களையும் உங்கள் உபகரணங்களையும் பாதுகாக்க, எச்சரிக்க உள்ளூர் ஆள் ஒருவர் இருப்பது நல்லது.
  • பொதுவாக ஒரு தனிநபரை வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கும் முன் அனுமதி கேட்பது நல்லது. குறிப்பாக எளிதாக வெளியேற முடியாத இடங்களில்.
  • தேவையான செய்திகள் கிடைத்ததும் அங்கேயே சுற்றாமல் கிளம்பிவிடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் கிளம்புவதாக முதலிலேயே திட்டமிட்டு, அந்த நேரத்தில் பணியை நிறுத்தி கிளம்பிவிடுங்கள். குழுவினர் யாராவது அசௌகரியமாக உணர்ந்தால் விவாதித்து நேரத்தை வீணாக்காதீர்கள். சட்டென்று கிளம்பிவிடுங்கள்.
  • பதிப்பிக்கும் முன், ஒளிபரப்பும் முன் அந்த இடத்துக்கு நீங்கள் திரும்ப வேண்டி இருக்குமா என்று யோசியுங்கள். இந்த செய்தி வெளிவருவது உங்கள் பயணத்தை எப்படி பாதிக்கும்?
நவம்பர் 7, 2023. இம்பால், மணிப்பூர். எதிரெதிர் இனக்குழுக்களுக்கு இடையிலான புதிய சண்டையில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்கு ராணுவ வாகனம் செல்லாமல் மெய்டெய் சமூகத்தினர் சிலர் தடுக்கின்றனர். ரியூட்டர்ஸ்/ஸ்ட்ரிங்கர்

மனநல பாதுகாப்பு: செய்தியறையில் மன அதிர்ச்சியைக் கையாளுதல்

இவைபோன்ற செய்திகள், சூழ்நிலைகளில் நிறைய மன அழுத்தம் ஏற்படும், நீங்கள் மன அதிர்ச்சி (trauma) குறித்து யோசிக்கவேண்டும்:

  • விவரமான கோரக் காட்சிகள் (சாவு, குற்றக் காட்சிகள், உயிராபத்து உள்ள வன்முறை)
  • பெரிய அளவிலான விபத்துகளும் பேரிடர்களும் (ரயில்/விமானம்/கார் விபத்துகள்)
  • வன்கொடுமை விசயங்கள், குறிப்பாக வயதானோர் குழந்தைகள் தொடர்புடையவை
  • பணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் தொடர்புள்ள எந்த மோசமான செய்திகளும்
  • அனுபவமில்லாத பணியாளர்கள் இத்தகைய செய்திகளை முதல்முறை எதிர்கொள்ளும்போது

இதுபோன்ற நாட்களில் நிர்வாகம் பணியாளர்களுக்கு வழிகாட்ட வேண்டும், அவர்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும். தேவைக்கேற்ப பின்வரும் வழிமுறைகளை யோசித்து நடைமுறைப்படுத்தலாம். செய்தியின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப நிர்வாகத்தின் வழிகாட்டுதலும் அதிகரிக்க வேண்டும்.

இதுபோன்ற நாட்களில்:

  • பணிகளை சுழற்சி முறையில் கொடுங்கள். ஒரே நபர் பல நாட்கள் தொடர்ந்து கடினமான காட்சிகளை எடிட் செய்யும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு விசயம் தனிப்பட்ட முறையில் மன உளைச்சல் உண்டாக்கும்போது அதை மறுக்கலாம் என உங்கள் குழுவுக்கு தெரிவதை உறுதிப்படுத்துங்கள். சவாலான செய்திகளைக் கையாளும்போது பிரச்சினைகளை உங்கள் பணியாளர்களால் பேச முடியவேண்டும், அவை தனிப்பட்ட முறையில் மரியாதையாக கையாளப்பட வேண்டும். கேள்வி மேல் கேள்வியாக கேட்கப்படக்கூடாது. காணொளி தொடர்பான வேலை வழங்கப்படுவதில் மட்டும் இதற்கு முக்கியமான விதிவிலக்குண்டு.
  • உங்கள் குழுவினர் தொகுப்பு வேலைகளுக்கு நடுவே இடைவெளி எடுப்பதை உறுதிசெய்யுங்கள். கடினமான செய்திகளில் வேலை செய்யும்போது அவ்வப்போது வேறு வேலை இல்லாத விசயங்கள் செய்வதையும்.
  • எல்லோரிடமும் அடிக்கடி, முதலிலேயே ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்று கேளுங்கள் – வெறுமனே மெசேஜ் அனுப்பாதீர்கள். உங்கள் அணியை தினம் ஒன்று அல்லது இருமுறை சந்தித்து எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் பேசலாம் என்பதை தெளிவுபடுத்துங்கள். பிரச்சினை குறித்து பணியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதையும் ஊக்குவியுங்கள். 
  • உங்கள் குழுவுக்கு இவற்றில் தொடர்பில்லை என்றால், மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களில் பிற குழுவினருக்கு உதவ அவர்களை மனமுவந்து அனுப்புங்கள்.
  • அழுத்தம் கூடுதலான நாட்களில் எல்லோரும் பணியிடத்தை விட்டுப் போகும் முன் சந்தித்து சுருக்கமாகப் பேசிக்கொள்ளுங்கள்.
  • பேசும்போது இந்த செய்தியால் சிலர் மன உளைச்சல் அடைந்திருப்பதை அதற்கு பொறுப்பான மேலாளர் ஏற்கவேண்டும். குறுகிய காலம் அப்படி இருப்பது இயல்பானதே. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் தங்கள் மேலாளர்களிடம் பேச வேண்டும். சகபணியாளர்களிடம் பேசுவதும் உதவும்.
  • பாரபட்சமில்லாத ஒருவரிடம் ரகசியமாக பேச விரும்பினார், பணியாளர் உதவித் திட்டம் (ஈ.ஏ.பி) அல்லது ஆலோசகர்கள் (கவுன்சிலர்கள்) யாரும் இருக்கிறார்களா?

மனநல பாதுகாப்பு: அதிர்ச்சி தொடர்பான மன-அழுத்தத்தைக் கையாளுதல்

அதிர்ச்சிக்குப் பின்னான மன-உளைச்சல் (பி.டி.எஸ்.டி) மன அழுத்தம் தரும் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் நிறைய எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.

வழக்கமாக, உயிராபத்துள்ள மிரட்டல் நிறைந்த சூழல்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் ஊடகப் பணியாளர்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு ஆளாவார்கள் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபமாக, எல்லாவித மன அழுத்தம் தரும் செய்திகளில் பணியாற்றுபவர்களும் பிடிஎஸ்டி அறிகுறிகளை உணர்வது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. வன்முறை (குற்றச்செயல் செய்திகள், குற்ற நீதிமன்ற வழக்குகள், திருட்டு போன்றவை), வன்கொடுமை, பெருமளவு உயிரிழப்பு (கார் விபத்துகள்/சுரங்க விபத்துகள்) இவை எல்லாமே மன அதிர்ச்சி உருவாக்கக் கூடியவை. இணையத்தில் கேலிசெய்யப்படும், மோசமாக திட்டப்படுபவர்களும் இத்தகைய அதிர்ச்சிசார் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.  

தணிக்கையில்லாமல் இணையப் பயனர்களால் வெளியிடப்படும் காட்சிகள் டிஜிட்டல் போர்வெளி ஒன்றை உருவாக்கியிருக்கின்றன. இவற்றில் மரணம் போன்ற கொடூரமான காட்சிகளைப் பார்க்க நேரும் பத்திரிகையாளர்களும் பதிப்பாசிரியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இத்தகையவை நேரடியாகப் பார்க்காமலே பிரதியெடுத்த மன அதிர்ச்சியை உண்டாக்குகின்றன.

பயங்கரமான நிகழ்வுகளையும்/ காட்சிப் பதிவுகளையும் பார்த்த பிறகு மன அழுத்தத்தால் கஷ்டப்படுவது இயல்பாக எல்லா மனிதர்களுக்கும் நிகழ்வதே என்பதை எல்லா பத்திரிகையாளர்களும் உணரவேண்டும். அது ஒரு பலவீனம் இல்லை.

எல்லோருக்கும்:

  • பேசுங்கள். மோசமான நிகழ்வுகள், கஷ்டமான காட்சிகள், சவாலான சூழல்கள் இவற்றால் மூத்த நிர்வாகிகள் தொடங்கி தொடக்கநிலை படத்தொகுப்பாளர்கள் வரை பாதிக்கப்படுவர். உங்கள் மேலாளரிடமோ மேற்பார்வையாளரிடமோ, அருகில் அமர்ந்து வேலை செய்பவர்களிடமோ பேசுங்கள். நீங்கள் அமைதியாக துன்பப்பட வேண்டியது இல்லை.
  • காணொளிகளுக்கு இடையிலோ, ஒரு குறிப்பிட்ட செய்தியில் இருந்தோ, களத்துக்கு செல்வதில் இருந்தோ உங்களுக்கு விலக்கு/இடைவெளி வேண்டும் என்பதைச் சொல்வது உங்கள் வேலையையோ எதிர்காலத்தையோ எவ்வகையிலும் பாதிக்காது என்பதை நினைவில் வையுங்கள்.
  • மோசமான காட்சிகளை தூங்குவதற்கு முன் பார்க்காதீர்கள். மோசமான செய்திகளை எதிர்கொண்ட நாட்களில் நேராக பாருக்கு செல்வதும், நிறைய குடிப்பதும் நல்லதல்ல. தூக்கம் இடையூறு படும்போது நீங்கள் அதிலிருந்து மீள்வதும் தடைபடும்.
  • உடல்பயிற்சியும் தியானமும் இவற்றில் உங்களுக்கு உதவும். நல்ல உணவும், போதுமான தண்ணீர் குடிப்பதும் முக்கியம்.
  • ஒரு காணொளி அதிர்ச்சியை உண்டாக்க கோரமாக இருக்கவேண்டியதில்லை. ரத்தம், வன்முறை காட்சிகளுக்கு கவனம் தேவை. அதேபோல, உணர்வுபூர்வமான ஒருவரின் சாட்சியமோ, மோசமான வசவுகளோ கூட மனச்சோர்வு தரலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விசயத்தால் பாதிக்கப்படுவார்கள், மன உளைச்சல் அடைவார்கள். உணர்வுகளை மதியுங்கள்.
  • களத்தில் இருந்தாலும் சரி படத்தொகுப்பு வேலைகளாக இருந்தாலும் சரி வாரக்கடைசியில் வேலை செய்தால், தினசரி கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்கு ஈடாக விடுமுறை நாட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை சேர்த்து வைக்காமல் சில நாட்களையாவது சீக்கிரமே எடுத்துக்கொள்ளுங்கள், அந்த நேரத்தை ஓய்வாக மீள்வதில் கழியுங்கள்.

தொகுப்பாளர்களுக்கு:

  • தேவையானதை விட கூடுதலாக பார்க்க வேண்டாம். சில தொந்தரவு செய்யும் காட்சிகள் ஒளிபரப்பாக வேண்டும்தான், ஆனால் நீங்கள் எதையும் நிரூபிப்பதற்காக அதைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த காட்சிகளை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்று முதலிலேயே உங்கள் மேலாளர் அல்லது மேற்பார்வையாளரிடம் பேசிக்கொள்ளுங்கள், அப்போதுதான் வெட்டப்படும் காட்சிகளை நீங்கள் திரும்பப் திரும்ப பார்ப்பதைத் தவிர்க்கலாம்.
  • மேலாளர், மேற்பார்வையாளர், சட்டக் குழுவினர் என யாரிடமும் ஒரு கோரமான அல்லது பார்க்க கடினமான காட்சிகளை காட்டும்போது, என்ன காணொளி அது என்று முன்னெச்சரிக்கை கொடுங்கள். உதாரணம்: “இந்த வீடியோவைப் பார்க்க முடியுமா?” என்பதை விட “ஒரு வன்முறை தாக்குதல் நடந்த உடனே எடுக்கப்பட்ட இந்த வீடியோவைப் பார்க்க முடியுமா?” என்று கேளுங்கள். என்ன பார்க்கிறோம் என்று தெரியாதபோது கோரமான காட்சிகளின் விளைவு இன்னும் அதிகமாக இருக்கும்.
  • சில பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது கஷ்டமான காட்சிகளைப் பார்க்கும் முன் இரண்டு கால்களையும் தரையில் அழுத்தமாக பதிப்பது, நீண்ட மூச்சு விடுவது, வேலை முடிந்ததும் சிறிய உடல்பயிற்சி இப்படி எளிமையாக ஏதாவதே போதும். உங்களுக்கு வசதியான பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • தினமும் கடினமான காட்சிகளைப் பார்க்க வேண்டிய ஒரு செய்தியில் பணிபுரிந்தால், அதைப் பற்றி பேசுங்கள். அது உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை பேசுங்கள், வேலை முடிந்ததும் உங்களை எப்படி கவனித்துக் கொள்ள போகிறீர்கள் என்று தெளிவாக யோசியுங்கள்.

களத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு:

  • மனதை வருத்தும் செய்திகளை ஒலிபரப்புவதைத் தவிர உங்களால் எதையும் செய்யமுடியவில்லை என்று வருந்துவதும், கையறுநிலையாக உணர்வதும் இயல்பானவைதான். நீங்கள் இப்படி உணர்கிறீர்கள் என்பதை சகபணியாளர்களிடமோ வேறு நெருக்கமானவர்களிடமோ பேசுங்கள். இவற்றைத் தவிர்க்காமல் வெளிப்படையாக பேசுவது முக்கியம்.

வழக்கத்தை விட மோசமாக இருந்தால்:

  • ஒரு நிகழ்வுக்குப் பிறகு பதட்டமாக, சட்டென்று பயப்படுபவராக இருப்பதோ, பயங்கரமான காட்சிகளை திரும்பத் திரும்ப மனதில் பார்த்துக் கொண்டே இருப்பதோ இயல்பானவைதான். உங்கள் உணர்ச்சிகளை ஒத்துக்கொள்வது உபயோகமானது. கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வது, சிறிய இடைவெளிகள் எடுத்துக் கொள்வதும் பயன் தருபவை.
  • நிகழ்வு நடந்து சில நாட்கள் அல்லது வாரங்களில் இந்த உணர்வுகள் போகவில்லை என்றால் அதை மூத்த பணியாளர்களிடம் சொல்லுங்கள். அவற்றில் மூழ்கிப் போவது போலத் தோன்றும்போது, எவ்வளவு விரைவில் உதவி பெறுகிறோமோ அவ்வளவு நல்லது.

உதவி தேவைப்படும் பத்திரிகையாளர்கள் சிபிஜே அவசர உதவியை தொடர்புகொள்ளலாம் emergencies@cpj.org அல்லது சிபிஜேவின் இந்திய பிரதிநிதி குணால் மஜும்தரைத் தொடர்புகொள்ளலாம்  kmajumder@cpj.org. தேர்தல் காலத்தில் பத்திரிகையாளர் பாதுகாப்பு பற்றி மேலும் விவரங்களுக்கு இந்த இணைய பக்கத்தைப் பாருங்கள்: Journalist Safety: Elections.